தேனி, செப். 4: தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் விடுபட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.67 கோடி மதிப்பீட்டில் 53 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், 1,904 இயந்திரக் குழிகள் அமைத்தல், 13,862 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்குதல் மற்றும் 13 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரூ.8.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நுண்ணுர செயலாக்க மையத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் காய்கறி சந்தைகளில் இருந்து சேகரிக்கப்படும் ஈரக் கழிவுகளை மக்கும் குப்பையாக மறுசுழற்சி செய்து, இயற்கை நுண்ணுரமாக மாற்றும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ். பார்கவி, நகராட்சி செயற்பொறியாளர் திலீப் குமார், சுகாதார அலுவலர் செபாஸ்டின், நகராட்சி மேலாளர் ஜெயந்தி, நகர்நல அலுவலர் கவிப்பிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *