கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நுண் கலைஞர் UMT ராஜா, இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் மிகவும் வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். சத்துமாவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ள இவர், அவற்றை நீரில் மூழ்கவிடாமல் தண்ணீரின் மேலேயே மிதக்கவிட்டு, அந்தச் சிலைகள் யோகாசன நிலைகளில் இருப்பது போன்று தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஒருமைப்பாடு மிகவும் அவசியம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில், தண்ணீரில் பல மணி நேரம் மிதக்கும் வகையில் இந்த யோகாசன விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாசனம் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை வலியுறுத்தும் இந்த விசித்திர யோகா விநாயகர் சிலைகள், அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளது.