நன்னிலம்.,
உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நோக்கில் தமிழக அரசு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளில் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026 நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களை நிரப்புதல், ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துதல், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக உயர்கல்வித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் உயர்கல்வி மாணவர்களுக்கு பொருளாதார சுமை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசின் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்தனர்.
தொடர்ந்து கல்லூரி பிரதான வாயில் முன்பு திரண்ட மாணவர்கள், தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் தமிழக அரசு நிறைவேற்றியதாகக் கூறப்படும் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவின் நகலை மாணவர்கள் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் கல்லூரி வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.