காஞ்சிபுரம்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு ராஜகோபுரத்தில் உள்ள ராஜகணபதி சந்தனகாப்புடன் காட்சியளித்தார்.புராண காலத்தில் வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும்.இந்திரன், இந்திராணியை கல்யாணம் செய்து கொண்ட சிறப்பு வாய்ந்தமையால் கல்யாண பரிகாரத் தலமாகவும் உள்ளது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி உற்சவம் இத்திருக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் திருக்கோயில் திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.

பிறகு ராஜகோபுரத்தில் அருள்பாலித்து வரும் ராஜகணபதிக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார். அதேபோல் பாலமுருகனும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராஜகணபதிக்கு மோதகம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் படையலிடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.பிராகாரத்தில் உள்ள விஜயகணபதி சந்நிதி முன்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கும் சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் பால் அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

மாலையில் விநாயகப்பெருமான் வெள்ளி இடபவாகனத்தில் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்கிட வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தி உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *