அறுவடைக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை
திருவாரூர்., செப்.15-
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பாசன வசதிகளை நம்பி சுமார் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் வயல்களில் தேங்கிய மழைநீரால் சாய்ந்தன. குறிப்பாக திருவாரூர் அருகே உள்ள எட்டியலூர், பெரும்புகலூர், பாலாவை, சீவிலி, வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடை செய்யப்பட இருந்த குறுவை நெற்பயிர்கள் பெருமளவில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை பெய்ததால், வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்கதிர்கள் மண்ணில் படிந்து கிடக்கின்றன. இதனால் நெல்மணிகள் முளைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து மழை பெய்தால் ஏற்கனவே சாய்ந்துள்ள பயிர்களில் மேலும் சேதம் ஏற்படும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு
குறுவை சாகுபடிக்காக விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழவு, நடவு, களை எடுப்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை நேரத்தில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்து பயிர்கள் சாய்ந்துள்ளதால், முதலீடு செய்த பணத்தை கூட திரும்பப் பெற முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளதால் இயந்திர அறுவடை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், விளைச்சல் மற்றும் நெல்மணிகளின் தரமும் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்டுள்ள வயல்களை வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர் இழப்பீடு கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.