பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242F மாவட்டம் சார்பில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பொறியாளர்களுக்குசோழன் விருது வழங்கும் விழா திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிரிமியர் லயன்ஸ் சங்க சாசனத் தலைவரும் மேலாண்மை குழு தலைவருமான சோமசுந்தரம் வரவேற்றார். பொறியாளர் தினம் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.
தமிழர் பாரம்பரியத்தையும் பேரறிவியலையும் இணைக்கும் பொறியாளர் மற்றும் ஆய்வாளர் சண்முகம் செல்வகுமார் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசுகையில், இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. கட்டுமான கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இக்கோயில், கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. கோவிலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று சிவபெருமானின் புனித வாகனமான நந்தியின் பெரிய சிலை ஆகும். 13 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்ட இந்த சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
பிரதான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான ஆலய கோபுரங்களில் ஒன்று. கோயிலின் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் ஆனது. லிங்கமும் கோபுரமும் கட்டமைக்க நீர் அழுத்த தொழில்நுட்பம் மூலம் கட்டுமானம் அமைக்க பட்டுள்ள நுட்பங்களை தனது ஆய்வாக எடுத்துரைத்தார்.
இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு தலைவரும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி தலைவருமானப் பொறியாளர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேனாள் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன், முதல் துணை ஆளுநர் ஸ்டாலின், இரண்டாம் துணை ஆளுநர் ராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் லயன்ஸ் சங்கங்கள் பரிந்துரை செய்த பொறியாளர்களுக்கு சோழன் விருதினை வழங்கினார். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில், சாசன தலைவர் பேராசிரியர் ஹேமலதா, சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பரிந்துரையில், பொறியாளர் சரவணன் சோழன் விருதினை பெற்றார். நிகழ்வில் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாவட்ட அலுவலர்கள், மாவட்ட தலைவர்கள், சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் இந்திரா கணேசன் லயன் சங்கத்தினர் நிகழ்வில் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி பிரிமியர் லயன் சங்க தலைவர் மணி, செயலாளர் பிரபு ,பொருளாளர் செல்வராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்