தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் கடந்த 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரம் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் மணிகண்டன் தனது கட்சிக்காரரை(குற்றவாளி என கூறப்படுகின்றது) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்துள்ளார்.
அப்போது அத்துமீறி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த காவலர் சண்முகசுந்தரம், ஆஜர்படுத்த வந்த நபரை குற்றவாளி என கூறி வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுத்த வழக்கறிஞர் மணிகண்டனுக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சீருடையில் இருந்தபோது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர் வந்து செய்த இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தொடர்ந்து காவல்துறையினர் வழக்கறிஞர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் கூறி தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களுக்குள் காவலர் சண்முகசுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்..