தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா, ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழும துணைத் தலைவர் கலைச்செல்வி லியோ முத்து, இயக்குநர் ரேவதி சாய்பிரகாஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா, தகவல் தொடர்பு முதன்மை செயல் அதிகாரி நரேஷ் ராஜ், முதன்மை வணிக அலுவலர் சதீஷ், மாணவர் விவகாரத் துறை டீன் ராஜேந்திர பிரசாத், வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் டாக்டர் மாறன், பேராசிரியர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மொத்தம் 1,451 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 1,249 பேர் இளநிலைப் பட்டதாரிகளும், 202 பேர் முதுநிலைப் பட்டதாரிகளும் ஆவர். மேலும், 35 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
விழாவில் தலைமை உரையாற்றிய டாக்டர் சாய்பிரகாஷ் லியோ முத்து, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்வி, சமூகப் பொறுப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மாணவர்கள் கல்வி அறிவுடன் தொழில்நுட்பத் திறன்கள், புதுமை சிந்தனை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றையும் வளர்த்துக்கொண்டு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், தொழில் துறையில் சிறந்து விளங்கிய லியோ முத்து பொறியியல் கல்லூரியைத் தொடங்க முன்வந்ததையும், கல்வித் துறையில் அவர் மேற்கொண்டுள்ள பணிகளையும் பாராட்டிப் பேசினார். மேலும், உதவி என்று கேட்டால் உடனடியாக உதவும் பண்பு கொண்டவர் லியோ முத்து என்றும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பொறியியல் கல்வியில் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வி என்பது தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்றும், தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடம் மாணவர்கள் அன்பும் நன்றியும் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொண்டு, பெற்றோர், கல்வி நிறுவனம் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.