தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார் வருவாய் கோட்டாட்சியர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஜெகநாத் மிஸ்ரா பேசியது

பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்குவதில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தெரிவித்தால், அவற்றை தீர்க்க முழு ஒத்துழைப்பு வழங்கி பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எக்காரணம் கொண்டும் தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு, அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை முறையாக ஏலம் விட்டு, அதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை முறையாக வசூல் செய்ய வேண்டும். அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இனி மாதந்தோறும் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களில் செயல் அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ளாத செயல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தனிச் செயலாளர் ரகுபதி செயல் அலுவலர்கள் உத்தமபாளையம், தேவாரம், பாலசுப்பிரமணியன் கோம்பை சுருளி வேல் பண்ணைப்புரம் சார் இளங்கோவன் அனுமந்தன்பட்டி, தீ. சீனிவாசன் புதுப்பட்டி வெ. கணேசன் ஓடைப்பட்டி அ. சுதா ராணி உள்பட பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *