திருவாரூர்., செப்.25-

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை மற்றும் ஊரக வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை செயல்படுத்தும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் தர்மதாஸ், அழகிரி, முத்துக்குமார், விஜயகுமார், சாந்தகுமார், அழகிரிசாமி, பிரிட்டோ, கீதா, வரதராஜன், விமல், ராமலிங்கம், கவுரி, கூடூர் குணா உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *