ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,500 மாணவர்கள் பங்கேற்பு

மன்னார்குடி., செப்.25-

தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, வனத்துறை, மாநில நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை இணைந்து இப்பணியை செயல்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மேலவாசல் முதல் சேரன்குளம் வரை சுமார் 11 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆகியோர் பனை விதைகளை நட்டு தொடக்கி வைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.

கூத்தாநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராபியம்மாள் மகளிர் கலைக்கல்லூரி-திருவாரூர், செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி-மன்னார்குடி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, சதாசிவம் கதிர்காம வள்ளி இருபாலர் கல்லூரி, ம.இரா. அரசினர் கலைக்கல்லூரி, சுவாமி தயானந்த கல்லூரி-மஞ்சக்குடி, பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி, சண்முக மேல்நிலைப்பள்ளி, தேசிய உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சேரன்குளம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சுப்ரமணி, முனைவர் பா.சுதா, அ.பிரபாவதி, வ.ஷோபனா, தில்லையாடி வள்ளியம்மை, இ.ஜீவிதா, பா.அருள்மொழி, முனைவர் சர்மிளா, ஆ.கிறிஸ்டி உள்ளிட்டோரும், பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் அருள் முனைவர் கெத்தலினா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகளின் கரைகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை வளப்படுத்துதல், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பணி நடைபெறுகிறது.

மாணவர்கள் ஒருங்கிணைந்து பனை விதைகளை நடும் நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *