தருமபுரி:
சாலையில் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்ற அரூர் எம்எல்ஏ, சாலையை பார்வையிட்டு டெண்டர் விடப்பட்ட நிலையில் பணியை உடனடியாக துவக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில், தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சிட்லிங் வழியாக சென்ற அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், காரில் இருந்து இறங்கி, தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களில் நடந்து சென்று சாலையின் நிலைமையை நேரில் பார்வையிட்டார்.
அப்போது பேட்டி அளித்த அவர், இந்த சாலை ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில், நிதி பெற்று தார் சாலை அமைக்கப்பட்டதாகவும், ஆனால் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களிலேயே சாலை மிகவும் பழுதடைந்ததாகவும், கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால் தினம் தோறும் செல்லக்கூடிய பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகுவதோடு உயிர் சேதங்களும் ஏற்பட்டு இருக்கிறது. வனப்பகுதிகளுக்குள் செல்லும் முக்கியமான மூன்று மாவட்டங்களை இணைக்கக்கூடிய ஒரு சாலையாக இருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தரமான சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக தொடங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த சாலை தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலை பழுதடையும் பொழுது அதை சீர் செய்வதற்கு தனியாக நீதி பெறவேண்டும், நிதி கிடைக்காத பட்சத்தில் இந்த சாலை பராமரிப்பு இல்லாமல் சீர் செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே இந்த நிலையை மாற்றி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்த சாலையை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்றார். ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலை பணி தொடங்குவதற்கான நடவடிக்கை இல்லாத நிலையில் இருந்து வருவதாகவும் எனவே சாலை பணியை தொடங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பேட்டி : சம்பத்குமார் – அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அரூர்