கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு
இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து தொழில், வர்த்தக வல்லுநர்கள் கருத்து – பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல வர்த்தகக் குழு சார்பில், இந்திய அளவில் முதல்முறையாக கோவையில் நடைபெற்ற ‘எமர்ஜ் 2026’ தேசிய வர்த்தக மாநாட்டில், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள், மாறிவரும் உலக பொருளாதார சூழல், தொழில் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகள், நிலையான வளர்ச்சிக்கான நிதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில் மற்றும் வர்த்தக வல்லுநர்கள் கலந்துரையாடினர்.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளி சமூகத்தினரை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் வேர்ல்டு மலையாளி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், நிறுவனங்களின் தலைவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இடையே புதிய தொடர்புகளை ஏற்படுத்துதல், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல், அனுபவமிக்க தொழிலதிபர்களுக்கும் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கும் இடையே வழிகாட்டுதல் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மற்றும் இந்தியாவில் உருவாகும் புதிய வாய்ப்புகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்வது, புதிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில் துறையின் பங்களிப்பு குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், நிலையான வளர்ச்சிக்கான நிதி மற்றும் நிர்வாகம், பாரம்பரிய தொழில்களின் அடுத்தகட்ட வளர்ச்சி, போட்டி நிறைந்த சூழலில் நிறுவனங்களை புதிய பாதையில் கொண்டு செல்வது, தொழில் நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
இளைஞர்கள் மற்றும் பெண்களை தொழில் துறையில் அதிகளவில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மலையாளி தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, நீடித்த வர்த்தக வலையமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டில் கல்யாண் சில்க்ஸ் நிறுவனர் டி.எஸ். பட்டாபிராமன், கேரள உப லோக் ஆயுக்தா நீதிபதி அசோக் மேனன், வாக்காரூ இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் வி. நவுஷாத், எஃப்.ஆர்.ஐ.சி.எல். தலைவர் வழக்கறிஞர் சி.பி. முகுந்தன், ஐ.ஐ.டி.பி–மோனாஷ் ஆராய்ச்சி அகாடமி தலைமை செயல் அதிகாரி எம்.எஸ். உன்னிகிருஷ்ணன், எமரால்டு நிறுவன நிர்வாக இயக்குநர் கே. சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
வேர்ல்டு மலையாளி கவுன்சில் குளோபல் பிசினஸ் ஃபோரம் தலைவர் டாக்டர் ஆர். ராஜேஷ் குமார், கே.சி.டி. பிசினஸ் பள்ளி பேராசிரியர் டாக்டர் பி. பூங்கொடி, என்சைன்ஸ் கன்சல்டன்சி நிர்வாக இயக்குநர் மோகன் நாயர், சமாரு பைனான்ஸ் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி தினேஷ் பொதுவால், ஐ.ஐ.டி.பி–மோனாஷ் ஆராய்ச்சி அகாடமி தலைமை செயல் அதிகாரி எம்.எஸ். உன்னிகிருஷ்ணன், பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மூத்த தலைவர் டாக்டர் கே.வி. தீபு, கேர் ரேட்டிங்ஸ் நிறுவன இயக்குநர் நிகில் சோனி உள்ளிட்டோர் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர்.
வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல தலைவர் பத்மகுமார் உலகளாவிய துணைத் தலைவர் சுரேந்திரன் கண்ணாட், இந்திய மண்டல வர்த்தக மன்றத் தலைவர் ராஜன் பி. நாயர், நிர்வாகிகள் ராஜன் ஆறுமுகம்,, ப்ரோவின்ஸ் கோர்டிநேட்டர்-இந்தியா ரீஜியன் தேவ்தாஸ் மேனன், விஜய சந்திரன், விஜயன் சேருவாசேரி, திருப்பூர் யு.எஸ். தினேஷ், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை ஒரே தளத்தில் இணைத்த இந்த மாநாடு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்கால தொழில் சூழல் மற்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் முக்கிய தளமாக அமைந்தது.