சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில் பாசன நீரின் தரம் குறித்து கவலை

மன்னார்குடி., செப்.28-

மன்னார்குடி பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பாமணி ஆற்றில் நகராட்சி கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சேரங்குளம் தடுப்பணை மதகு பகுதியில் ஆற்று நீர் கருப்பு நிறத்தில் காணப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பா சாகுபடிக்காக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாமணி ஆறு மூணாறு தலைப்பிலிருந்து பிரிந்து மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று பல்வேறு விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை வழங்குகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக எழுந்துள்ள புகார், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக சேரங்குளம் தடுப்பணை பகுதியில் நீரின் நிறம் மாறியிருப்பதாகவும், கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், நீரின் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி வி.எஸ்.அண்ணாதுரை கூறுகையில்:

“பாமணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். இருந்தபோதிலும் தற்போது கழிவுநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் பாசன நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. சேரங்குளம் தடுப்பணை பகுதியில் தண்ணீரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நீர் கீழ்ப்பகுதிகளுக்குச் சென்றால் விவசாயம் பாதிக்கப்படும்.

பாமணி ஆற்று நீரை மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆற்று நீரின் தரத்தை ஆய்வு செய்து, கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக தலையிட வேண்டும்” என்றார்.

பாமணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறப்படும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் பாசன நீரின் தரம் தொடர்பான பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *