மன்னார்குடி., செப்.28-
மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சீனிவாச ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலச் செயலாளர் அசோக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மருந்து வணிகர்கள் தற்போதைய சூழலில் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார், புதுச்சேரி விநாயகா மிஷன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மருந்து வணிகர்களின் தொழில் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
10 தீர்மானங்கள்
மருந்துக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக CDSCO-விடம் எதிர்ப்பை பதிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்கள் தனித்தனியாக எதிர்ப்புக் கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணத்தில் இருந்து மருந்து வணிகர்களுக்கு முழு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, உரிய உரிமம் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை திரும்பப் பெறக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு மருந்து விற்பனை உரிமத்தையே போதுமான ஆவணமாக ஏற்க வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மருந்து வணிகர்களுக்கான ஜிஎஸ்டி வரி நடைமுறையில், Composition Scheme-ல் உள்ளவர்களுக்கு 3 மாத விற்றுமுதலுக்கு 0.5 சதவீத வரி செலுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மருந்துப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவத் தேவையற்ற பொருட்களுக்கும் உரிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை உரிமம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஒரே மருந்தை பல நிறுவனங்கள் தயாரிக்கும் நிலையில், மருந்துகளின் தரத்தை அகில இந்திய அளவில் பரிசோதிக்க வேண்டும் என்றும், நுகர்வோருக்கு தரமான மருந்துகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
NPPA-வின் தற்போதைய மருந்து விலை நிர்ணய முறையை மாற்றி, உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் கல்வி அறக்கட்டளையில், சங்கத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரை அவர்களது பதவிக்காலம் வரை பதவிவழி அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தரமற்ற மருந்துகள் (NSQ) என அறிவிக்கப்படும் மருந்துகளுக்கு சில்லறை வணிகர்களை பொறுப்பாக்காமல், உற்பத்தியாளரே முழுப் பொறுப்பேற்று அவற்றை திரும்பப் பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்கச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார். சங்க நிர்வாகி பாபு நன்றி கூறினார்.