கோவை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கோவையில் அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

மதுரையில் முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இங்கு மதுரை முதல்வர் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சம்பத்குமார், முதலமைச்சரின் சிறப்பான திட்டம் இது, குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நினைக்கக்கூடிய உறவு தான் தாய்மாமன், அதன்படி இந்தத் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் தனது பிறந்தநாளில் அறிவித்துத் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னோடியாக இருந்த ரசிகர் மன்றத்தில் இருந்தே இதனை செயல்படுத்தி வருவதாகவும் பெண்கள் எவ்வாறு முதலமைச்சரைச் சகோதரனாகப் பார்க்கிறார்களோ, அதேபோன்று அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் முதலமைச்சரைத் தாய்மாமனாகப் பார்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று 2,467 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படுவதாகவும், இனி நான்கு மண்டலங்களிலும் தினமும் 25 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கு முதலமைச்சர் வருகை குறித்தான கேள்விக்கு
தாராபுரம் இடைத்தேர்தலுக்கு முதலமைச்சர் வருகை என்பது முதலமைச்சரான பிறகு முதன்முறையாகக் கோவைக்கு வருவதால், அவருக்கு நல்ல முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேரிகேடுகள் அமைப்பது வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைதான் என்றும் கூறிய அவர் தங்களுடைய முதலமைச்சருக்கு வரக்கூடிய கூட்டம் தன்னெழுச்சியாக வரக்கூடிய கூட்டம் என்றும், 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து மக்களை அழைத்து வர வேண்டிய அவசியம் நமது முதலமைச்சருக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

RTI அரசாணை ரத்து செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு,
RTI தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அதனை ஜனநாயகத்தின் நல்ல பாதையாகப் பார்க்க வேண்டும், அனைவரின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு அரசாணையைத் திரும்பப் பெறுவது சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு எங்களுடைய சொந்தப் பணத்தில் எங்களால் முடிந்த அளவுக்கு இதனைச் செய்து வந்தோம். ஆனால், தற்போது மக்களின் வரிப் பணத்தில் மக்களுக்காகவே வழங்குகிறோம். அதனை அனைத்து குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துகிறோம். அந்தப் பொறுப்பை மக்களும் எங்களுக்கு வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் குறைபாடுகள் உள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கண்டறியப்படும் பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கோவை அரசு மருத்துவமனையின் பார்க்கிங் வசதி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேசமயம், மருத்துவமனைக்கு வரக்கூடியவர்கள் மருத்துவமனை அடையாள அட்டை வைத்திருந்தால் கட்டணமில்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை விவகாரங்கள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், எங்களுடைய பரப்புரையின்போது ஒரு சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. அவை முழுக்க முழுக்கத் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய ஒரு விஷயம்தான் என்றும், மற்ற கட்சிகள் தேவையில்லாத விஷயங்களை முன்னிறுத்தி எங்களுடைய பரப்புரையைத் திசைதிருப்பி அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திமுகவும் அதிமுகவும் அதைத்தான் அன்றைய காலத்தில் செய்து வந்தன. அதிலிருந்தே அவர்களுடைய தோல்வி பயம் தெரிந்துவிட்டது. எப்போது குறுக்கு வழியில் ஜெயிக்க நினைத்தார்களோ, அப்போதே அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று நம்முடைய முதலமைச்சர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.
அவர்களின் கீழ்த்தரமான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது சரியாக இருக்காது என்றும், தற்போது உள்ள மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர்கள் பேசுவதெல்லாம் சரிதானா, இவர்களா நம்மை இத்தனை காலம் ஆட்சி செய்து வந்தார்கள் என்று வெட்கப்படும் அளவிற்கு நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தங்க மோதிரங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தான கேள்விக்கு,
குழந்தைகளுக்கான தங்க மோதிரங்கள் இரும்புப் பெட்டகங்கள் மூலம் பாதுகாக்கப்படுவதாகவும், 24 மணி நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புக் குறைபாடு எங்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சாலை வசதிகள் குறைபாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இதற்கு முன்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டால் அது யாருக்கு வழங்கப்பட்டது, எந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டது என்பது பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால், இனி வரும் காலங்களில் அவ்வாறு இருக்காது என்று தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு முறையற்ற பணம் சென்றுவிடக்கூடாது. அனைவருக்கும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தகுதியுடைய அனைவரும் ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்து கொள்ளலாம். அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்றும், அது முடிந்தவுடன் கோவையில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார், சாலை வசதிகள் சரியாக இல்லை என்று பதிவு செய்பவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவர்களது வாயிலாகப் பிரச்சினைகளை அறிந்துகொள்வதாகவும் கூறினார். எனவே, அதனை அடிப்படையாகக் கொண்டு எங்களுடைய பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

தலைமைக் காவலர் வேல்முருகனுக்குப் பாராட்டு குறித்து பேசிய அவர் கோவில்பாளையம் தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர் செய்தது துணிச்சலான செயல் என்றாலும், அவருடைய பாதுகாப்பும் அரசாங்கத்திற்கு முக்கியம் என்றும், பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *