பேராவூரணி., செப்.29-

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விழாக்களையொட்டி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக அப்படியே இருப்பதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராவூரணி பகுதியில் ஆடி, ஆவணி மாதங்களில் திருமணம், காதணி விழா, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

விழா நடைபெறும் நாட்களில் வைக்கப்படும் இந்த பேனர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பல இடங்களில் அகற்றப்படாமல் தொடர்ந்து காட்சியளிக்கின்றன. இதனால் சில இடங்களில் வாகன ஓட்டிகளின் பார்வையையும் மறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினரிடம் உரிய அனுமதி பெறப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முக்கிய சாலையோரங்கள் மற்றும் சந்திப்புகளில் முறையான அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுவதால்
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையிலும், சாலை சந்திப்புகளில் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத வகையிலும் பேனர்கள் அமைக்கப்பட்டால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் காற்றில் அசையும் பேனர்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, பேராவூரணி பகுதியில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சி முடிந்தவுடன் பேனர்களை அகற்றுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும், விபத்து ஏற்படும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றுவதுடன், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *