பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மையங்களில் வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026 க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் கடந்த 04.11.2025 அன்று தொடங்கப்பட்டு இதுவரை 5,90,490 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3,09,434 விண்ணப்ப படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 148- குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 320 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி 04.12.2025 வரை நடைபெறவுள்ளது.ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.
அதில் நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள பெயர், புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டு இருக்கும். அதன்பிறகு கோரப்பட்டு இருக்கும் அனைத்து சுய விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும்.
கணக்கெடுப்பு படிவத்தினை பெற்றிட்ட வாக்காளர் இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் தனது பதிவுகளை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று நிரப்பிடலாம்.
வாக்காளர்களால் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் செய்தார். எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் தகுதியுள்ள வாக்காளர் அனைவரையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பணிகளை விரைவாகவும், தெளிவாகவும் விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் அனிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.