தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவரது கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., இன்று விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை சென்ற கனிமொழி, மத்திய சிறையில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதிதான இடமல்ல. 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த சிறைச்சாலை இதுதான். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யார் இந்த சிறைச்சாலைக்கு வந்தாலும், அதை ஒரு பெருமையாகவே கருதுவார்கள். அந்த வகையில், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனும் இதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டு சிறையில் இருக்கிறார்
அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற அச்சுறுத்தல்கள், வழக்குகள், கைதுகள் என எதற்கும் பயப்படக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் இல்லை. எத்தனை பொய் வழக்குகள் தொடரப்பட்டாலும், அவற்றை சட்டரீதியாக எதிர்கொண்டு சந்திப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களுடைய தலைவர்களும் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
இன்றைக்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் எந்த நிலையில் இருக்கிறது என்பது அத்தனை பேருக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.இப்படியான சூழலில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரை முறையாக விசாரிப்பதற்குக்கூட அரசு தயாராக இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளையம், சந்தேகத்தையும் எழுப்புகிறது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தவறாக பேசினார் என்பதற்காக கைது செய்து சிறையில் அடைக்ககூடிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன்பு அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு போடப்பட்டு,கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தார்கள்.
மேலும், ஒவ்வொரு முறையும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதள இன்ப்ளூயன்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க இந்த அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தவெக அரசுக்கு மக்கள் மீது உண்மையான அக்கறையோ, கவலையோ, நம்பிக்கையோ இல்லை. காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதிலேயே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தவெகவை சார்ந்தவர்கள் எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் எவ்வளவு விமர்சித்து பேசி இருக்கிறார் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் இப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. தவெகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. யார் தன்னை விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை.
யாருடைய பெயரையும் நேரடியாகச் சொல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பாஜக என்ற பெயரைச் சொல்வதற்குக்கூட தயங்கும் நிலையில் தான் இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தவெக யாருக்குப் பயந்து அரசியல் செய்கிறார்களோ, அதே பாதையில்தான் அவர்களும் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக தங்களுடைய கருத்துகளை பதிவு செய்பவர்களையும், ஜனநாயக ரீதியில் போராடுபவர்களையும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கையாள்வது போன்று காவல்துறையை பயன்படுத்தி அடக்குவதையே தவெக அரசு மேற்கொண்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கைகளிலும், கருத்துகளிலும், குறிப்பாக தமிழ்நாட்டின் நலன் என்று வரும்போது எப்போதும் எந்த சமரசத்திற்கும் இடமளித்ததில்லை; இனியும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தலையங்களுக்கும், அனுமானங்களுக்கும் நாங்கள் பதிலளிக்க முடியாது. இருப்பினும், கடந்த முறை கொண்டு வரப்பட்ட மசோதா தொடர்பாக எங்களுடைய கருத்துகளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறோம். அந்தக் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
எந்த காலத்திலும் அதிமுகவும் திமுகவும் நெருங்கியதில்லை. கடந்த காலங்களில் தமிழ்நாட்டிற்காக போராடக்கூடிய சூழலில் உரிமைகளுக்காகவும் , நதிநீருக்கான கோரிக்கைகளுக்காகவும் ஒன்றாக கூட்டங்கள் நடத்தப்பட்டு பின்னர் பிரதமரை சந்தித்திருக்கிறோம்.தமிழ்நாட்டின் உரிமைகளில் எல்லா கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு பேச வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தக்கூடிய கருத்து.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு கைவிடப்பட வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம். மேலும் மாணவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய அளவிற்கு இந்த வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகள் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற சூழலில் இருக்கிறது.மாணவர்களுடைய போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளாது என்றார்.