கோவை

திமுகவின் தலைவராக ஸ்டாலின் இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விமர்சனம்…

கோவை விமான நிலையத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க. தரப்பில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து தனிப்பட்ட மற்றும் இழிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், தி.மு.க.வுடன் இணைந்து அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்த அ.தி.மு.க. தற்போது இல்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனா, ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த பலரும் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் 40 தொகுதிகள் வரை அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகவும், அப்போது மக்கள் மற்றும் தொழில் துறையினர் விரும்பியது அமைதியான நிர்வாகம் எனவும் தெரிவித்தார்.

தற்போது அ.தி.மு.க.வில் இரண்டு அணிகள் இருப்பதாகவும், அதில் ஒன்று எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை மையமாகக் கொண்ட அணி எனவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.

எந்தக் கூட்டணியும் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், தற்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இணைந்து களத்தில் பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க. விரைவில் உடையும் எனக் கூறிய ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியின் சொத்துகளை கைப்பற்றும் நோக்கில் மிதுனை முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தி.மு.க.வுடன் இணைந்து இதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பிறகும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவர்கள் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் மிதுன் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

கொங்கு மண்டலத்தின் முகமாக இருந்த தலைவர்கள் அ.தி.மு.க.வில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கொங்கு மண்டலத்திற்கு தற்போது ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்யின் சுற்றுப்பயணம் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, மறைந்த விஜயகாந்த் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அவர்களுடனேயே தற்போது பிரேமலதா விஜயகாந்த் இணைந்து இருப்பதை மட்டும் நினைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், “தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும், அதன் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார்” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட மற்றும் இழிவான பிரசாரங்களுக்கு கொங்கு மண்டல பெண்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *