மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தலைமை மருத்துவமனையில், நீரில் மூழ்கும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், அவசர காலங்களில் உயிர்களை காப்பாற்றும் முதலுதவி முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் போலி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி திரு. வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, நீரில் மூழ்கிய நபர்களை பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டிய முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சை முறைகள் குறித்து செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.

மேட்டூர் தலைமை மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நீரில் மூழ்கியவர்களை மீட்ட பின்னர், அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நீர்நிலைகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்றும், குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது பெரியவர்கள் உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீரில் மூழ்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அறிவுறுத்தினர்.

நீரில் மூழ்கும் சம்பவங்களின்போது பதற்றமின்றி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *