தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மரணம்
அரசியல், சமூக தலைவர்கள் அஞ்சலி – மாநில காங்கிரஸ் தலைவர் இரங்கல் செய்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் செயலாற்றிய ரவிச்சந்திரன் (55) உடல்நலக்குறைவால் திண்டுக்கல் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அவரது பூத உடல் நேற்று தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, இன்று சனிக்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை முதலே பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு, முன்னாள் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.காளிமுத்து, தாராபுரம் நகரத் தலைவர் செந்தில்குமார், வட்டார செயலாளர் முத்துக்குமார், அசோக் குமார், சீனி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகரச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள், திமுக – விசிக – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பெரும்திரள் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவரது மரியாதைக்காக தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் அனைத்து டீக்கடைகள், பேக்கரி, ஹோட்டல் கடைகள் இன்று முழுவதும் தன்னார்வ அடைப்பில் இருந்தன.

ரவிச்சந்திரன் சமூகத்திற்காக மேற்கொண்ட பணிகள் குறித்து நகர்மக்கள் பேசும் போது,
“தாராபுரம் வளர்ச்சிக்காக அவர் பகலிரவு பாராமல் உழைத்தவர். குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட பொதுநலப் பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. எளிமை, மக்களோடு கலந்துசேரும் பண்பு, பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கும் திறன் ஆகியவற்றால் அவர் மக்களின் மனதை வென்றவர்,” என தெரிவித்தனர்.

ஹோட்டல் தொழில்துறையின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்கள் நலனுக்கும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு தொழில்துறையில் உயர்ந்து பேசப்பட்டது.

பின்னர், பேருந்து நிலையம் – அமராவதி ரவுண்டானா – பொள்ளாச்சி சாலை – பெரியகடை வீதி – புது காவல் நிலைய வீதி – வழியாக இறுதி ஊர்வலம் சென்று அலங்கியம் சிக்னல் அருகே உள்ள மின்மயானத்தில் தகனம் நடைபெற்றது.

ரவிச்சந்திரனின் மறைவிற்கு தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் மாநிலம், மாவட்டம், தொகுதி மட்டங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *