வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள சூழ்நிலையில், மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் நல்ல நீரில் உருவாகக்கூடிய நோய் பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் பொருட்களை கண்டறிந்து அகற்றுதல், கொசுப்புழுக்களை அழித்தல் மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்சமயம் தூத்துக்குடி மாநகராட்சியில் 212 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் (Domestic Breeding Checkers – DBCs) மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியாளர்கள், இயந்திரங்கள், வாகனங்கள் கொண்டு இந்த நோய் பரவல் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகையால், இப்பணி இனிவரும் காலங்களில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற, மாநகராட்சியிலிருந்து வீடு தேடி வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.