பேராவூரணி, அக். 8-
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான அரசியல் வகுப்பு இரு தினங்கள் நடைபெற்றன.

முதல் நாள் வகுப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் அமர்வில் ‘மார்க்சிய சித்தாந்தம்’ என்ற தலைப்பில் தீர்க்கதிர் தோழர் கே. வசந்தன் உரையாற்றினார். மாலை அமர்வில், ‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார்.

இரண்டாம் நாள் வகுப்பில் ‘நவீன உலக ஏகாதிபத்தியம்’ என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் இரா. சிந்தன், மாலை அமர்வில் ‘இந்துத்துவா வகுப்புவாதம் – எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் ஆர். பதரி, ‘மாவட்ட ஸ்தாபனப் பணிகள்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார். . மேலும், மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், செம்மலர் வாசகர் வட்டம், குழு விவாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்றன.

பயிற்சி முகாமில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜெயபால், எஸ். தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் ஏற்கனவே சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசுக்கு ஆதரவாக முடிவுகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமான முறையில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்தி சுமார் 13.5 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி பாஜகவிற்கு ஆதரவாக தேர்தலின் போக்கையே மாற்ற முயற்சித்துள்ளார். எனவே அவர் பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் வகையில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. தற்போது பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் கிளை தொடங்க அனுமதி அளித்திருப்பது, கல்வித் துறையை முழுமையாக தனியார்மயமாக்கும், வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்க்கிறது.

டெல்டா மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமான தஞ்சை மாவட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு போதிய தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வேலை இழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் முறையாக வழங்கப்படுவதில்லை. வேலைக்குச் செல்பவர்களிடம் கருவிழி பதிவாகவில்லை எனக் கூறி வேலை மறுக்கப்படுகிறது. இதனால் வயதான பெண்கள், முதியவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

மேலும் தஞ்சை மாவட்டம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கிராமப்புறங்களில் சாலை வசதி, சுகாதார வசதி, சுடுகாட்டிற்கான பாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டும் என்று அக்டோபர் மாதத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கோயில்கள், மடம் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக திருவிடைமருதூர் ஒன்றியம் திருச்சேறை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை, கோயில் நிலத்தில் குடியிருப்பதாகக் கூறி கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. கோயில் நிர்வாகம் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாவை கோயில் பெயருக்கு மாற்றியது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் காலம் காலமாக பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு நகர்த்தப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேராவூரணி நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *