பழங்குடி மக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது. கோட்டப்பட்டி – சிட்லிங் மலைப்பாதை சாலையை 5 கோடியே 80 லட்சம் ரூபாயில் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாலைப் பணியின் தரத்தை உறுதி செய்ய அரூர் எம்.எல்.ஏ. 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் ஊராட்சி. 42 கிராமங்களை உள்ளடக்கிய இந்த மலை கிராமத்திற்கு செல்லும் ஒரே வழி கோட்டப்பட்டி – சிட்லிங் மலைப்பாதை. 8.5 கிலோ மீட்டர் கொண்ட இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக பள்ளம் மேடுகளுடன் குளம் போல காட்சியளித்து வந்தது. 2018-19 ஆம் ஆண்டு போடப்பட்ட தார்சாலை 6 மாதத்திலேயே பழுதடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் கர்ப்பிணிகள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைக்க கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரை டெண்டர் விடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த டெண்டர் புதுப்பிக்கப்பட்டு
6 மாதத்திற்குள் பணியை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சாலைப் பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் இன்று 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தரமான சாலையை அமைத்து தர வேண்டும் என வனத்துறைக்கு அறிவுறுத்தினார். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

ஆய்வின் போது உதவி வனப் பாதுகாவலர் சி.சரவணன், கோட்டப்பட்டி வன அலுவலர் ஆனந்த்குமார், தொழில்நுட்ப பிரிவு அலுவலர் அல்லிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *