​கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை (EEE) சார்பாக, AICTE-VAANI நிதியுதவியுடன் “விக்சித் பாரத் 2047-ல் ஆற்றல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மீள்திறனுக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய அளவிலான பயிலரங்கம் சிறப்பாகத் தொடங்கியது.

​இப்பயிலரங்கின் தொடக்க விழா நிகழ்வு ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடி, பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து, துறைத் தலைவர் டாக்டர் பி. பத்மநாபன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தொழில் நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவு, செய்முறைத் திறன்கள் மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஊக்குவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் டாக்டர் R. திருமலை அவர்கள் அறிமுக உரையாற்றி, மாணவர்கள் சிக்கலான பொறியியல் கருத்துக்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்ளும் வகையில் வட்டார மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

​இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோயம்புத்தூர் விண்ட்பிளஸ் பிரைவேட் லிமிடெட் (Windplus Pvt. Ltd.) நிர்வாக இயக்குநர் முனைவர் என். கருணாமூர்த்தி அவர்கள் பயிலரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்கள், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தி அமைப்புகளின் நடைமுறை முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும், மின் பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான மின் உற்பத்தி ஆகிய துறைகளில் உருவெடுத்து வரும் புதிய வாய்ப்புகளை மாணவர்கள் ஆராய வேண்டும் என்றும், எதிர்கால ஆற்றல் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

​நிகழ்வின் நிறைவாக, திரு. G. வினோத் அவர்கள் நன்றியுரையாற்றினார். அவர் சிறப்பு விருந்தினருக்கும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த கல்லூரி இயக்குநர், முதல்வர், துறைத் தலைவர், கல்விசார் டீன் (Dean – Academics), பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இறுதியாக, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *