மாதவரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் பிரபு திறந்து வைத்தார் – மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வாழ்த்து

செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ரூ.72.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்த வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாதவரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய் பிரபு, புதிய வகுப்பறைக் கட்டிடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கிய எம்.எல். விஜய் பிரபு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *