கும்பகோணம்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆயுத பூஜை விழாவுக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவர் பூக்கடை S.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கன்னியாகுமரி மாவட்டம் பாரம்பரியம் மிக்கது. பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருமேனிகள் திருவனந்தபுரம் செல்வது, வெள்ளிமலை முருகன் கோயிலுக்கு பொதுப்பணித் துறையினரும் காவல் துறையினரும் காவடி எடுப்பது, நாகராஜர் கோயில் அன்னதானம், பகவதி அம்மன் கோயில் நவராத்திரி ஆறாம் நாள் விழா எனப் பல விழாக்கள் அரசுத் துறைகளின் பங்களிப்போடு நடைபெறுகின்றன. அதுபோலவே அரசு போக்குவரத்துக் கழகத்திலும் ஆயுத பூஜை தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
விபத்தில்லா இயக்கம், நிறுவன வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வேண்டி தொழிலாளர்களும் அதிகாரிகளும் இணைந்து விழாக் குழு அமைத்து, தங்கள் ஊதியத்திலிருந்து பணம் பிடித்தம் செய்து இவ்விழாவை நடத்தி வருகின்றனர்.
தற்போது நிர்வாகம் பணம் பிடித்தம் செய்ய மறுப்பதால், 60 ஆண்டு கால பாரம்பரிய விழா தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளர்களின் வழிபாட்டு உரிமையைக் கருத்தில் கொண்டு, ஆயுத பூஜை விழாவைத் தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.