பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குப்பைகளைச் சேகரித்து முறையாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக, தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்கும் வகையில், சாக்கடைக் கால்வாய்கள் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பொதுமக்களிடையே தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, லட்சுமிபுரம் ஊராட்சியில் பசுமையைப் பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, ஜெகதீசன், லட்சுமிபுரம் ஊராட்சி செயலர் லெனின், முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *