கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை கல்லூரியில் மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கிடும் பணியினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாணவர்களின் உயர்கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கினைத்து நடத்தப்பட்டது. இந்த கல்விக்கடன் முகாமில் அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கிட வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முகாமில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அனைத்து வங்கிகளின் மூலம் 750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதோடு இம்முகாமில் பங்கேற்றுள்ள வங்கியாளர்களை நேரில் அனுகி தங்களுக்கான கல்விக்கடனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் இந்த மாபெரும் கல்விக்கடன் முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களது உயர்கல்வி கனவை அடைந்து தங்களது வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், மண்டல மேலாளர் இந்தியன் வங்கி சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் அரவிந்த், முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி உட்பட வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.