நாட்டுப்புற நடனப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்று மாணவர்கள் சாதனை!

தென்காசி மாவட்டம், சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாட்டுப்புற நடனப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், இளையோர் திறன் என்ற தலைப்பில் கோயம்புத்தூர் மாவட்டம், அரசூர் கே.என்.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கடந்த 27.10.2026 அன்று நடைபெற்றது.

இப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நடனம், வில்லுப்பாட்டு, ஓவியம் வரைதல், சிற்பம் செய்தல், இசை, நுண்கலை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 18 வகையான போட்டிகள் நடைபெற்றன.

இதில் சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டுப்புற நடனம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புறப் பாடல், மாறுவேடம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு பிரிவில் நடைபெற்ற நாட்டுப்புற நடனக் குழுப் போட்டியில் சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் நடைபெற உள்ள விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பரிசுகளை வழங்க உள்ளார்.

மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *