தென்காசி, நவ. 4-

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே ரயில் மோதி 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூலாங்குடியிருப்பு – பகவதிபுரம் ரயில் பாதையில் அதிகாலை தூத்துக்குடி – பாலக்காடு விரைவு ரயில் மோதியதில் ஆண் புலி உயிரிழந்தது.
இதுகுறித்து அதிகாலை 3.30 மணியளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றாலம் வனச்சரகப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரயில் மோதியதில் புலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.


தகவலறிந்த தென்காசி மாவட்ட வன அலுவலர் டாக்டர் ரா. ராஜ்மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) வழிகாட்டுதலின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புலியின் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.


வனத்துறை கால்நடை மருத்துவர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர் சாந்தகுமார் மற்றும் புளியரை கால்நடை மருத்துவர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புலியின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் மற்றும் உள் உறுப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேவையான மாதிரிகள் மற்றும் மருத்துவச் சான்றுகளும் சேகரிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் பதிவு செய்யப்பட்டன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உரிய ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன.


வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் முருகன், மாவட்ட வனஅலுவலர் டாக்டர் ரா. ராஜ்மோகன், உதவி வனப் பாதுகாவலர் நெல்லை நாயகம், வனச்சரக அலுவலர் யாசின், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் மற்றும் போலீசார், வனத்துறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் புலியின் உடல் சம்பவ இடத்திலேயே உரிய முறையில் எரியூட்டப்பட்டது.

சார்பில் இதுகுறித்து வனத்துறை வனக்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரயில் மோதி புலி உயிரிழந்ததற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *