கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவுலகத்தை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் அறிவுலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே இதனை பார்த்திருந்தாலும், திறந்து வைக்கப்பட்டு முழுமை அடைந்த பிறகு இன்று ஆசிரியர் வீரமணியுடன் இணைந்து பார்வையிட்டேன்.
அதிகமான கூட்டம் இருந்ததால் பொறுமையாக அனைத்து பகுதிகளையும் பார்க்க முடியவில்லை. எனவே, மீண்டும் ஒருமுறை வந்து முழுமையாக பார்வையிட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தமிழகம் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? பெரியாரின் உணர்வுகள், லட்சியங்கள் என்ன என்பதை இளைஞர்களும் மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவுலகத்தை பார்வையிட்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் மதுரையில் கலைஞர் பெயரில் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், திருச்சியில் காமராஜர் பெயரிலும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தந்தை பெரியார் அறிவுலகத்தை பொறுத்தவரை 99 முக்கால் சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தால், இந்த அரசு அதற்கு மூடு விழா நடத்தியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லவேளையாக இந்த திட்டம் தப்பித்துவிட்டது. இதேபோல் மற்ற நூலகங்களும் சிறப்பாக உருவாக வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக தந்தை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான நாள் இது. இந்த சாதனையை நிகழ்த்தியவர் இங்கு இருக்கிறார். அவருடன் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிற்கிறோம். இந்த சாதனைக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு நிச்சயமாக இருக்கும்.
இது வெறும் நூலகம் மட்டுமல்ல. அறிவியலும் இடம்பெற்றுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல், பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
எனது 84 ஆண்டுகால பொது வாழ்வில் இதுபோன்ற பொன்னான வாய்ப்பை பெற்றதில்லை. எனவே, அனைவரின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அறிவுலகம் பரவட்டும்; அறியாமை நீங்கட்டும். சாதி, மதம், பேதம் இல்லாமல் அனைவரும் வந்து செல்லும் இடமாக இந்த அறிவுலகம் திகழும். இதனை நிர்மாணித்தவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்; திராவிடம் வாழும்; நூலகங்கள் பெருகும் என கி.வீரமணி தெரிவித்தார்.