பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிவுரை – பள்ளி மாணவர்களுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கல்!
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாப்பது, எதிர்பாராத விதமாக பட்டாசு கண்களில் பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவோம் என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மருத்துவர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம் என தெரிவித்தனர்..
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாசன் கண் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் கண் விழித்திரை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் அனுஷா வெங்கட்ராமன், கண்புரை மற்றும் கண் அழுத்த நோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயமணிகண்டன், குழந்தைகள் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெகஜனனி, மருத்துவர் டாக்டர் நாடியா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடன் மண்டல மேலாளர் முருகேசன், மேலாளர் ஜீவன், மக்கள் தொடர்பு மேலாளர் சுரேந்தர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.