பட்டா பெயர் மாற்றம் செய்வதில் இழுத்தடிப்பு எனக் குற்றச்சாட்டு – ஒரு மணி நேரத்தில் பட்டா மாற்றம் செய்து வழங்கிய அதிகாரிகள்
புவனகிரி, நவம்பர் 5:
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தென் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேம்பரசி என்பவர், தனது பூர்வீக நஞ்சை விவசாய நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்யக் கோரி பல நாட்களாக விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால், தென் கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜனனி பட்டா பெயர் மாற்றம் செய்வதில் காலதாமதம் செய்துள்ளார்.
இதையடுத்து, வேம்பரசி தனது பெயரிலும், மகன் சக்தி பிரியன் பெயரிலும் பட்டா மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து, புவனகிரி வட்டாட்சியரிடமும் மனு அளித்துள்ளார்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் ஜனனி, வேம்பரசியின் மகன் பெயருக்கு மட்டும் பட்டா மாற்றம் செய்து, அதில் வேம்பரசியை தாய் என்று சேர்க்காமல் காப்பாளர் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து மீண்டும் வட்டாட்சியரிடம் மனு அளித்து, ஆன்லைன் மூலமாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.இருப்பினும், மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டபோது காப்பாளர் என்பதற்குப் பதிலாக தாய் எனக குறிப்பிட்டு மீண்டும் மகன் பெயருக்கு மட்டும் பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த வேம்பரசி, இன்று மாலை சுமார் 4 மணியளவில் புவனகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனைப் பார்த்த வட்டாட்சியர் ஷானாஸ் மற்றும் துணை வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் உடனடியாக அவரைத் தடுத்து, உயிரைக் காப்பாற்றினர். தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர் ஜனனி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி வேம்பரசி புகார் மனு அளிக்க முயன்றபோது, வட்டாட்சியர் ஷானாஸ் அதனை ஏற்க மறுத்ததாகவும் வேம்பரசி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சிதம்பரம் கோட்டாட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.