முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில்குமார்
பரமக்குடி நவ 6,
தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் தலைமையில், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வின்சென்ட் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் அவர்கள், கழகத்தின் அமைப்புப் பணிகளை வலுப்படுத்துவதில் வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று எடுத்துரைத்தார்.
மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தகுதியான, பொறுப்புணர்வுடன் செயல்படக்கூடிய முகவர்களைத் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, கழகத்தின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை அளவிலான நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், நிர்வாகிகளின் பொறுப்புகள், எதிர்கால அமைப்புப் பணிகள் மற்றும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகரக் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.