தள்ளுவண்டிகள், பழவகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேதப்படுத்தக் கூடாது – மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஏ.ஆறுமுகம் கோரிக்கை!

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது சாலையோர நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது தள்ளுவண்டிகள், பழவகைகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று சேதப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பிரச்சாரச் செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகள் தங்களது அன்றாட வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் சுமார் 2,600 நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், பதிவு செய்யப்படாத நிலையில் வாழ்வாதாரத்திற்காக சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை, எளிய மக்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர்.

மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகள் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிடைக்கும் 10 நாள் வியாபார வருமானத்தை நம்பியே தங்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மேற்கொள்ளும்போது ஏழை, எளிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சில அதிகாரிகள் வரம்பை மீறி வியாபாரிகளின் தள்ளுவண்டிகள், விற்பனைக்காக வைத்திருக்கும் பழவகைகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை எடுத்துச் செல்வதாகவும், இதனால் வியாபாரிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த ஆண்டு இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, வியாபாரிகளின் பொருட்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு முன்பாக, அவரவர் பகுதிகளில் சாலையோரம் உரிய இடங்களை ஒதுக்கி, சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

5,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.ஏ.ஆறுமுகம் வியாபாரிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் மாநகர சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர்கள் ஆர்.புஷ்பா, ஆர்.கவிதா, கே.நடேசன், எம்.ஞானவேல், ஜெ.கலாம்பாஷா, எம்.ராஜகுமாரி, வே.கலா, சி.ரத்தினம்மாள், வி.சத்யா, ஏ.அபிநயா உள்ளிட்ட ஏராளமான நடைபாதை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *