எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கதிராமங்கலம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பயிற்றுநர் ஆனந்த், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, தஞ்சை எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராமத்தில் தங்கி களப்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கேக்குகள் வழங்கப்பட்டன. அதனை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு உண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், வேளாண்மைக் கல்லூரி பயிற்சி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.