தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தனது மகனுக்கு, மற்றவர்களுக்கு வழங்கியது போல் ரூ.20 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என கோரி, பாதிக்கப்பட்ட தாய் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம், கீழமுடி மண் பகுதியை சேர்ந்தவர் கயல்விழி. இவரது மகன் ஜஸ்டின் செல்வா மதிஷ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தனது மகன் மட்டுமல்லாமல் மேலும் 13 நபர்கள் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் கை, கால்களை இழந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நிவாரணமாக தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கியது. ஆனால் தனது மகனுக்கு மட்டும் வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே வழங்கி நிறுத்தி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் முறையிட்டதாகவும், விசாரணையின் இறுதியில் ஒன் மேன் கமிஷன், மற்ற நபர்களுக்கு வழங்கியது போல் ரூ.20 லட்சமும், தமிழக வெற்றிக்கழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 25 லட்சமும் அரசு பணியும் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.

எனவே, தனது மகனுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள இழப்பீட்டு தொகையையும், அரசு பணியையும் உடனடியாக வழங்கி நீதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *