திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் அரசியல் பாடல் பாடிய விவகாரம் – பாடகர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்,-சிவசேனா மாநில இளைஞரணித் தலைவர் பேட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, பக்திப் பாடல்களுக்கு இடையே அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பாடியதாகக் கூறப்படும் பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக சிவசேனா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக,தமிழ்நாடு சிவசேனா மாநில இளைஞரணித் தலைவர் அட்சய திருமுருகதினேஷ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பக்திப் பாடல்களுக்கு இடையே முதல்வர் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் பெயர்களை இணைத்து அரசியல் சார்ந்து பாடியதாகக் குற்றம்சாட்டினார்.
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை மையமாகக் கொண்ட பாடல்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை இணைத்துப் பாடியது பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும், இது இந்து சமயத்தின் உணர்வுகளை மதிக்காத செயலாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சூரசம்ஹார நிகழ்வை நேரில் காண முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகளில் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்குப் பதிலாக அரசியல் கலந்த கலைநிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.
எனவே, பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதற்காக பாடகர்கள் வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இனிவரும் காலங்களில் திருக்கோயில் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் சிவசேனா நிர்வாகி அட்சய திருமுருகதினேஷ் வலியுறுத்தினார்.