கடலூர்: கடலூர் மாநகராட்சியில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிதியையும், மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.29 ஆயிரம் கோடி நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடலூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, காலை மற்றும் மாலை என இருவேளையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கம்மியம்பேட்டை மின் மயானத்தில் எரியூட்டுவதற்கான கட்டணத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தியதை திரும்பப் பெற்று, கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், தினசரி குப்பைகளை அகற்ற வேண்டும், கொசு மருந்து தெளிக்க வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், மகப்பேறு மருத்துவமனையை முறையாக செயல்படுத்துதல், பஸ் நிலைய கழிப்பறைகளை சீரமைத்தல், பயணிகள் நிழற்குடைகள் அமைத்தல், மண்டல அலுவலகம் ஏற்படுத்துதல், மஞ்சக்குப்பம் சந்தையை திறத்தல், பான்பரி மார்க்கெட் பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *