கூத்தாநல்லூர்., நவ .19-
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு குனுக்கடி பகுதியில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள், நகர்மன்ற உறுப்பினரின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து சாலையோரம் மாற்றி அமைக்கப்பட்டன.
இப்பகுதியில் வயல்வெளியில் மின்கம்பங்கள் அமைந்திருந்ததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே. முத்துகிருஷ்ணன் (பிரவீனா) மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மின்கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு மின்கம்பங்கள் அனைத்தும் சாலையோரம் மாற்றி அமைக்கப்பட்டன. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூத்தாநல்லூர் தாசில்தார், நகராட்சி ஆணையர் மற்றும் மின்வாரியப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் தாமதமாகி வந்த பணி, மாவட்ட கலெக்டரின் தலையீட்டால் விரைவாக நிறைவேற்றப்பட்டதால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தெருவிளக்குகள் இல்லாததால் அச்சம்: –
மின்கம்பங்கள் சாலையோரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் சாலையோரங்களில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குனுக்கடி பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.