முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர் செந்தில்குமார்
ராமநாதபுரம், நவ. 20:
ராமநாதபுரம் மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மருத்துவ சேவை அணி, ஜாதி, மத வேறுபாடின்றி உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் வகையில் தொடர்ந்து இரத்ததான சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இச்சேவையைப் பாராட்டி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விருதினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செல்வாம்பிகை, மருத்துவமனை நிலைய மருத்துவர் டாக்டர் மனோஜ் குமார், துணை நிலைய மருத்துவர் டாக்டர் கண்ணகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நூர் முகமது மற்றும் இரத்த வங்கி அமைப்பாளர் டாக்டர் மணிமொழி ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்வில் தமுமுக மருத்துவ சேவை அணியின் மாவட்டச் செயலாளர் முகம்மது தமீம், மாவட்டத் துணைத் தலைவர் ஜாகீர் பாபு மற்றும் முகமது தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேய அடிப்படையில் தொடர்ந்து இரத்ததான சேவையாற்றி வரும் தமுமுக மருத்துவ சேவை அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.