கோவையில் ‘மாப்பி’ குறும்படம் வெளியீட்டு விழா – நடிகர்கள் நிழல்கள் ரவி, புகழ் பங்கேற்பு!
பஞ்சாப் தமிழன் சினிவேர்ல்டு (Punjab Tamilan Cineworld) தயாரிப்பில், டோனி ஆனந்த் சிங் தயாரித்து, பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாப்பி’ (MAAPI) குறும்படத்தின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில், பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர்.
இந்தக் குறும்படத்தில் ஒரு வயது குழந்தையான ரயோம் கெயில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தையின் நடிப்பும், படத்தின் கதைக்களமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..
குறும்படத்தை பார்வையிட்டு பின்னர் பேசிய நடிகர் நிழல்கள் ரவி மற்றும் புகழ் ஆகியோர், குறும்படங்கள் என்பது வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த களமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுபோன்ற முயற்சிகள் மூலம் புதிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து பெரிய திரை சினிமாவிலும் தடம் பதிக்க வாய்ப்பு உருவாகிறது என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், தற்போதைய இளம் தலைமுறையினர் சினிமா துறையில் வியக்க வைக்கும் வகையிலான புதுமையான சிந்தனைகள், கதை சொல்லும் உத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளுடன் களமிறங்கி வருவதாகவும், அவர்களின் படைப்பாற்றலுக்கு உரிய வாய்ப்புகளும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குறும்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படைப்புகளாக மட்டுமின்றி, புதிய கலைஞர்களின் எதிர்காலத் திரைப்படப் பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமைகின்றன என்பதை ‘மாப்பி’ குறும்படம் எடுத்துக்காட்டி உள்ளது குறிப்பிடதக்கது..
விழாவில் திரைப்படத் துறையினர், குறும்படக் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.