மணவை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு பாராட்டு!
திருச்சி: திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அலுவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் தனது இல்லத்திலேயே பாரம்பரிய புழங்கு பொருட்கள் காட்சியகத்தை அமைத்துள்ளார். இந்தக் காட்சியகத்தை மணவை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். நிகழ்வில் அறங்காவலர் எம்.கே. முத்துப்பாண்டி, புரவலர் ப. சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது காட்சியகத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் விளக்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், பாரம்பரிய புழங்கு பொருட்கள் ஒரு சமூகத்தின் வாழ்வியல், தொழில்நுட்ப அறிவு, கலைநயம் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அவை கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலங்களாகத் திகழ்கின்றன.
ஒரு நாகரிகத்தின் பெருமையை அதன் கட்டிடங்கள் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட சாதாரணப் பொருட்களும் வெளிப்படுத்துகின்றன. மண் பானைகள், வெண்கலப் பாத்திரங்கள், மர அளவைகள், விவசாயக் கருவிகள், விளக்குகள், இசைக்கருவிகள், நெசவுக் கருவிகள் உள்ளிட்டவை தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றைப் பறைசாற்றும் ஆவணங்களாக உள்ளன.
அம்மி, உரல், உலக்கை, வெண்கலக் கும்பா, செம்புக் குடம், முகத்தல் அளவைகள் மற்றும் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் போன்ற ஒவ்வொரு பொருளும் அக்கால மக்களின் பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைப்பதன் முக்கிய நோக்கம் பழங்காலப் பொருட்களைப் பாதுகாப்பது, இளைய தலைமுறையினரிடம் பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குக் கள ஆய்வு வாய்ப்புகளை உருவாக்குவது, நாட்டுப்புற வாழ்க்கை முறையை ஆவணப்படுத்துவது, அழிந்து வரும் கைவினை மரபுகளை அறிமுகப்படுத்துவது ஆகியவையாகும்.
இத்தகைய காட்சியகங்கள் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை வழங்குவதுடன், வரலாறு, தொல்லியல், நாட்டுப்புறவியல், மனிதவியல் மற்றும் கலை வரலாறு போன்ற துறைகளில் ஆய்வு மேற்கொள்வோருக்குச் சிறந்த களப்பயிற்சி மையமாகவும் அமைகின்றன. ஒரு பொருளை நேரில் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம், புத்தக அறிவைக் காட்டிலும் ஆழமான புரிதலை ஏற்படுத்தும்.
உலகமயமாக்கலின் தாக்கத்தால் பாரம்பரியப் பொருட்கள் பலவும் பயன்பாட்டிலிருந்து மறைந்து வருகின்றன. அவற்றைக் காட்சிப்படுத்திப் பாதுகாப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தையும் வரலாற்று நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும்.
புழங்கு பொருட்கள் வெறும் பழமையான நினைவுச் சின்னங்கள் அல்ல. அவை தலைமுறைகளுக்கிடையே அறிவையும் அனுபவத்தையும் பரிமாறும் வரலாற்று ஊடகங்களாகும். மேலும், இளைஞர்களிடம் வரலாற்று ஆர்வத்தை உருவாக்குவதோடு சமூக ஒற்றுமையையும் மரபுப் பாதுகாப்பு உணர்வையும் வலுப்படுத்துகின்றன.
புழங்கு பொருட்களின் வடிவமைப்பு, தயாரிப்பு முறை, பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலத் தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக அமைப்பு மற்றும் கலை வளர்ச்சியை ஆய்வு செய்ய முடியும். எனவே, இத்தகைய காட்சியகங்கள் எதிர்கால ஆய்வுகளுக்கான உயிருள்ள தரவுத் தளங்களாக விளங்குகின்றன.
வருங்காலத்தில் காட்சியகத்தில் உள்ள பொருட்களை முறையாகப் பட்டியலிட்டு, அவற்றின் வரலாற்றுப் பின்னணியுடன் ஆவணப்படுத்தி, டிஜிட்டல் காப்பகமாக மாற்றும் திட்டமும் உள்ளது.
பாரம்பரியப் புழங்கு பொருட்கள் காட்சியகம் என்பது பழங்காலப் பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அறிவியல் மற்றும் வாழ்வியல் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஓர் உயிர்ப்புமிக்க கல்விக் கூடமாகும் என்று விஜயகுமார் தெரிவித்தார்.