ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை முற்றிலும் தடுக்கும் வகையில், “போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நாள் – ஜீரோ விதிமீறல், காரணங்கள் கிடையாது, சமரசம் கிடையாது” என்ற பெயரில், கூடுதல் போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரிலும், வடக்கு போக்குவரத்து துணை ஆணையரின் அறிவுறுத்தலின்பேரிலும் நேற்று ஒரு நாள் முழுவதும் சிறப்பு வாகனச் சோதனை நடைபெற்றது.
இதன்படி, ராயபுரம், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையின்போது, புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வந்த சுமார் 1,500 வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், சோதனையில் பிடிபட்ட வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து போலீசார் எடுத்துரைத்தனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாகவும் பந்தயம்போல் (ரேஸ்) வாகனங்களை இயக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் சிறப்பு வாகனச் சோதனைகள் சென்னை முழுவதும் நேற்று நடைபெற்றன. தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தவிர்க்க முன்வருவார்கள் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.