பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி,கொடி நாள் நிதி திரட்டலை, உண்டியலில் நிதி அளித்து, துவக்கி வைத்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான தேநீர் விருந்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படை வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாளன்று படைவீரர் கொடிநாள் டிசம்பர்-7ஆம் அனுசரிக்கப்படுகின்றது. அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடிநாள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடி நாள் நிதி திரட்டும் பணி துவக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான கொடி நாள் நிதி திரட்டும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுடைய குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்பிற்கும் பொருளுதவியும், பிற உதவிகளும் செய்திட திரட்டப்படும் இந்த நிதியினை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் தாராளமாக வழங்கிட வேண்டும்.
முன்னாள் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முன்னாள் படை வீரர் நல நிதியின் மூலமாக மாதாந்திர நிதியுதவி, புற்றுநோய் நிவாரணர ஆயுட்கால நிதியுதவி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாதாந்திர நிதியுதவி, முழுவதும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான நிதியுதவி, பக்கவாத நிவாரண மாதாந்திர நிதியுதவி, முன்னாள் படைவீரர்களின் முதல் 2 மகள்களுக்கு திருமண நிதியுதவி, முன்னாள் படைவீரர் இறப்பு ஈமச்சடங்கு நிதியுதவி, விதவையர் இறப்பு ஈமச்சடங்கு நிதியுதவி, வீட்டுவரிச் சலுகை அதிகபட்சம் ரூ.10,000மும், வீட்டுக்கடன் மானியம் ரூ.1,00,000மும், தொகுப்பு நிதியின் கீழ் தொழிற்கல்விக்கு ரூ.25,000மும், டிப்ளமோ படிப்பிற்கு ரூ.20,000மும், கலை அறிவியல் படிப்பிற்கு ரூ.10,000மும், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரையிலும், முன்னாள் படை வீர்ர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கட்டண விலக்கும், வேலைவாய்ப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2024-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி இலக்காக ரூ.23,63,000/- நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நமது மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.36,31,225/- நிதிவசூலித்துள்ளோம். நம் நாட்டிற்கா பாடுபடும் வீரர்களின் நலன் கருதி நிதி வழங்கிய ஒவ்வொருவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2025-க்கான கொடிநாள் இலக்காக ரூ.24,81,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே அனைத்துத்துறை அலுவலர்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக நிதி திரட்ட வேண்டும். பொதுமக்கள் இயன்ற அளவில் நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, புற்றுநோய் உதவித்தொகை உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 06 நபர்களுக்கு ரூ.1,05,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 2024ம் ஆண்டின் கொடி நாள் வசூல் இலக்கினை எய்திய 43 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(மு.கூ.பொ) .கலையரசி காந்திமதி, மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..