திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் மரபு நடை பயணத்தை மேற்கொண்டனர்.
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் திருச்சி உறையூர் சோழன்பாறை கல்வெட்டு பகுதிக்கு சென்றனர்.

சோழன் பாறை மலைக்குன்றை பார்வையிட்டு விஜயகுமார் பேசுகையில், சங்ககால சோழர்களின் தலைநகர் உறையூர் ஆகும். பிற்கால சோழர்காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது. திருச்சி உறையூர் நகரின் வெளிப்பகுதியில் சோழ நல்லூர் கட்டளை கால்வாய் வட துருவத்தில் அமைந்துள்ளது

ஓர் சிறிய மலைக்குன்று. மலைக்குன்றில் வடக்கில் இருந்து தெற்கு திசை நோக்கி ஒன்பது படிக்கட்டுகள் மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ளன.ஒன்பது படிக்கட்டுகள் சீராக இல்லை. ஒவ்வொரு படியும் ஒவ்வொரு உயரம் அகலத்தில் உள்ளது. ஒன்பது படி உயரம் 325 செமீ உயரம் படி அகலம் 59 செமீ உள்ளது.ஒன்பதாவது படியேறியவுடன் மலைக்குன்றில் நீள் செவ்வக வடிவில் குடையப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்றுள்ளது.

கல்வெட்டு தெற்கு திசை நோக்கி மலை குன்றில் உள்ளது. தற்போது இக்கல்வெட்டு மிகவும் சிதைந்த வண்ணம் படிக்கமுடியா வண்ணம் உள்ளது. இக்கல்வெட்டு 1890ல் படியெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு உட்கூடு உயரம் 84 செமீ அகலம் 59 செமீ ஆகும். இந்த 120 வருட இடைவெளியில் முழுவதும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு தென்னிந்திய தொகுதி 4 ல் வெளிவந்துள்ளது. இவ்வூரிலுள்ள ஜெயங்கொண்ட சோழநல்லூர் எனும் கட்டளை வாய்க்கால், பாடிகாவல் காக்கும் தலைவர்களில் ஒருவர் வெட்டியதாய் தெரிகிறது. இன்று இக்கட்டளை வாய்க்காலும், கல்வெட்டும் உருக்கொழைந்துபோய் உள்ளது. நிலம் தானமாக கொடுக்கப்பட்டதற்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு என கூறுகின்றனர்.

மலைக்குன்றின் மீது கிழக்கு திசை நோக்கி ஸ்ரீ முக்தி விநாயகர், ஸ்ரீ சோழன் பாறை தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது. கோவில் எதிரே இரும்பு வேல் அமைக்கப்பட்டு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளது. குன்றின் மேல் வேம்பு, ஆலம் மரமும் உள்ளது. தற்போது மலைக்குன்று கீழே வடகிழக்கு மூலையில் சூலாயுதம் வைத்து விளக்கேற்றி பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள். இளைஞர்கள் பொழுது போக்குவதற்கு மலைக்குன்றை பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *