தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இ-ஃபைலிங் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர கோரிக்கை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கூடுதல் நீதிமன்ற வளாகத்தின் முன்பு, தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றங்களில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-ஃபைலிங் முறை, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமல் திடீரென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். கணினி வசதி, இணைய இணைப்பு, தொழில்நுட்ப உதவி மையம், பயிற்சி ஆகிய அடிப்படை ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இ-ஃபைலிங் முறையை கட்டாயப்படுத்துவது நீதித்துறையின் செயல்பாட்டை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், வயதான வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் வரும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இதனால் வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதுடன், நீதிமன்ற நடைமுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையில், தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திய பின்னரே இ-ஃபைலிங் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அதுவரை பழைய கைமுறை வழக்குத் தாக்கல் நடைமுறையை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் நீதியை நாடி வரும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த பிரச்சினையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், நீதித்துறையின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *