வலங்கைமானை அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 15 ஏக்கர் விளைநிலங்கள் உரிய பலன் அளிக்காத நிலையில் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் சுமார் 250 எக்டர் விளைநிலங்கள் குடமுருட்டி ஆறு, சுள்ளானாறு, வெட்டாறு மூலம் வாசன வசதி பெறுகிறது. இந்த சம்பா மற்றும் தாளடி கை நடவு, இயந்திர நடவு, நேரடி விதைப்பு என்ற முறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை நிறுத்தப்பட்டதை அடுத்து மின் மோட்டார்கள் மூலமே சுமார் 80 சதவீத அளவிற்கு சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் வடகிழக்கு பருவ மழையினை நம்பி சுமார் 10 சதவீதம் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி நேரடி விதைப்பாக மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி விதைப்பு செய்து உரிய மகசூல் ஈட்டி வந்த நிலையில், நடப்பாண்டு தொடக்கம் முதலே வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததை அடுத்து உரிய நேரத்தில் களை நிர்வாகம் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல், உர நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இயலாமல் போனது.

தற்போது நேரடி விதைப்பு களைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு போதிய வளர்ச்சி இன்றி உரிய மகசூல் தருவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது.

எனவே நேரடி விதைப்பில் உரிய மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் உரிய இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *